

சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 2026.06.26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களினால் இவ் ஓவியக் கண்காட்சியானது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சந்திரகாந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கண்காட்சியில், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு, ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்பல் மற்றும் சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் பல்வேறு கருத்துமிக்க ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. ஹன்சுல் ஷிஹானா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றஊப், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜரூப், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஓவியங்களை பார்வையிட்டு, மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை பிரதிபலிக்கும் ஆக்கங்களைப் பாராட்டினர்.


அத்துடன் இந்நிகழ்வின் போது பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெயிக் எம்.ஐ.எம்.ஜவாஹிர் மௌலவி அவர்களினால் போதைப் பொருள் அற்ற சமூகத்தை நோக்கிய விழிப்புணர்வு உரையாடல் ஒன்று மாணவர்கள் மத்தியில் இடம்பெற்றது.
இதன் போது இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துவதோடு, பொறுப்புணர்வும் நற்பண்புகளும் நிறைந்த ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான சிறந்த தளமாக அமையும் எனவும் கலாசார உத்தியோகத் தரினால் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணருவதோடு மட்டுமல்லாமல், போதைப்பொருள் பாவனையின் பாதகமான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வினை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் பரப்பிய அர்த்தமுள்ள நிகழ்வாக இவ் ஓவியக் கண்காட்சி அமைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


















